எந்த நாட்டின் இளவரசி
இளமை தவழும் எழிலரசி
சந்தன மெழுகினில் நறுமணம் செஞ்
சாந்தமும் குழைந்த தோர் பேரரசி!
பல்லக்கில் அமர்ந்துதான் இருக்கின்றால்!
பாதுகாவலர்கள் சுமக்கின்றார் !
நல்லியல்புகள் நிறைந்தவளோ?
நாணமோ தவழும்பிறைநுதலோ?
சந்தடிசாக்கில் திரைவிலகும்!
தரிசனம் கிடைக்கும் மெய்சிலிர்க்கும்!
பந்தமே நிறைந்த சேர்ந்திசையோ?
பரதமும் இணைந்த மெல்லிசையோ?
பல வகை மணிகளும் இசைபாடும்!
பவ்வியமாகவே நடைபோடும்!
சிலவகை எழில் துகில் அசைந்தாடும்!
சென்றிடும் திசையெல்லாம் மணம் கூடும்!
ஆடியும் பாடியுமே ஓடியுமே
ஆசவாசமும் விசுவாசமும்
கோடியாம் பொன் பொருள் பொக்கிஷம் போல்
கொண்டடுதான் சொல்கிறார் சேவகர்கள்!
சந்தன வாசமும் மல்லிகையும்
ஜவ்வாது திலகமும் நறுமணமும்
அந்த நொடியினில் அகில்புகையும்
அவள் செல்லும் திசையெல்லாம் கமகமக்கும்
புண்ணியம் செய்தவோர் இளவரசன்
புரவியில் எதிர்கொண்டு ஏற்பானோ
பெண் இவள் இயல்பினை ஆயுலெல்லாம்
பேணியே நலம் பெறக் காப்பானோ!
முத்துச் சரங்களோ பல்லக்கினில்
முன்னும் பின்னுமே இழையோடும்!
எத்தனை கரிசனம் பெற்றவர்கள்
இதயமே அல்லவா? வாழியவே!
Monday, September 27, 2010
Saturday, September 25, 2010
Subscribe to:
Posts (Atom)
